வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தில் நற்கருணை சிறப்பு பவனி

வில்லியனூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில் ஜூன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திவ்ய நற்கருணை சிறப்பு பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுவை அருகே வில்லியனூரில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை திருத்தலம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இந்த திருத்தலம் சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமயத்தினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற சிறப்புமிக்க லூர்து அன்னை திருத்தலத்தில் திவ்ய நற்கருணை சிறப்பு பவனி ஜூன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதனையொட்டி திருத்தலத்தில் நடைபெற்ற துவக்க சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திவ்ய நற்கருணை மாதா கோவில் வீதி, ஒதியம்பட்டு வீதி வழியாக பவனியாக கொண்டு செல்லப்பட்டு ஆலயத்தை மீண்டும் சென்றடைந்தது.

அந்நேரத்தில் பக்தர்கள் மதபாகுபாடின்றி மலர்களை தூவி வணங்கி போற்றினர். இதேப்போல் வானதூதர்களை போன்ற உடை அணிந்திருந்த சிறுமிகள் சாலையின் இருபுறமும் நின்றபடி மலர்களை தூவியும், பீட சிறுவர்கள் தூபமிட்டபடியும் திவ்ய நற்கருணைக்கு மரியாதை செய்தனர்.

இதனை வில்லியனூர் புனித லூர்தன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து அடிகளார் தலைமையேற்று நடத்தினார். திவ்ய நற்கருணை பவனியை முன்னிட்டு மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை அன்பியங்கள் சார்பில் 3 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் அருட்தந்தையர்கள் மறையுரையாற்றி சிறப்பு ஆசீர் வழங்கினர். இதனை தொடர்ந்து அருள்நிறை ஆலயத்தில் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.
இதில் வில்லியனூர் மட்டுமின்றி புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் புனித லூர்தன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் ஜோசப் சகாயராஜ், ஜான்பால் மற்றும் பக்த சபையினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் ஹோலி கிராஸ் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*