சமரசம் தோல்வி – காங். தலைவர் பதவியில் நீடிக்க ராகுல் மறுப்பு

ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று ராகுலிடம் முதல் மந்திரிகள் வலியுறுத்தியும் அவர்கள் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாத அளவுக்கு படுதோல்வியைத் தழுவியதால் விரக்தி அடைந்த ராகுல், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.டெல்லியில் கடந்த மே மாதம் 25-ந்தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்தனர்.

ராகுலை நேற்று காங்கிரஸ் முதல்-மந்திரிகள் அசோக் கெலாட், கமல்நாத், கேப்டன் அம்ரீந்தர்சிங், நாராயணசாமி ஆகிய 4 பேரும் சந்தித்துப் பேசினார்கள். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, “தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது நல்லது அல்ல. எனவே ராஜினாமா முடிவை கைவிடுங்கள்” என்று ராகுலிடம் அவர்கள் வலியுறுத்தினார்கள்.ஆனால் அதன் பிறகும் ராகுல் மனம் மாறவில்லை. “புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று பிடி கொடுக்காமலே ராகுல் கூறினார். இதைத் தொடர்ந்து “நீங்கள் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாங்களும் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறோம்” என்று அசோக் கெலாட்டும், கமல் நாத்தும் தெரிவித்தனர்.

ஆனால் ராகுல் அதை ஏற்கவில்லை. அதே சமயத்தில் தனது ராஜினாமா முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார்.இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. மூன்று மூத்த தலைவர்களின் பெயர்கள் தலைவர் பதவிக்கு தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டன. இறுதியில் சுசீல்குமார் ஷிண்டேயை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யலாம் என்ற ஒருமித்த கருத்து உருவானதாக கூறப்படுகிறது.

இதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒத்துக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. எனவே சுசீல்குமார் ஷிண்டே புதிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் காங்கிரசில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*