கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம்

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது.

சென்னை குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை குறித்து புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.அதில் மோசமான நிர்வாகம், ஊழல், அரசியல், வித்தியாசமான அதிகாரத்துவம் ஆகியவையே குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என தமிழக அரசை குற்றஞ்சாட்டி இருந்தார்.மேலும் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமும் கூட காரணம் என்று தமிழக மக்களையும் விமர்சித்திருந்தார். கவர்னர் கிரண்பேடியின் இந்த விமர்சனம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

தமிழக சட்டசபையில் புதுவை கவர்னரை கண்டித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பும் செய்தார். மேலும் கிரண்பேடி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.கவர்னர் கிரண்பேடியை கண்டித்து புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது.

புதுவை அண்ணாசாலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக கவர்னர் மாளிகையை நோக்கி சென்றது.ஊர்வலத்தை போலீசார் தலைமை தபால் நிலையம் அருகே தடுத்தனர். அங்கு கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும், தமிழக மக்களிடம் கவர்னர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் புதுவை முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி கவர்னர் மாளிகையை சுற்றி பேரிகார்டு அமைத்து தடை ஏற்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*