அமமுகவில் விலகினார் இசக்கி சுப்பையா- அதிமுகவில் இணைகிறார்

அமமுகவில் இருந்து விலகிய இசக்கி சுப்பையா வரும் 6ம் தேதி அதிமுகவில் இணைய உள்ளதாக கூறினார்.

முன்னாள் அமைச்சரும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலக உள்ளார் என்றும், அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலக உள்ளதாகவும் தகவல் பரவியது.இந்நிலையில் தென்காசியில் இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தினால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. நான் குறைந்த காலமே அமைச்சராக இருந்ததாக என்னை கிண்டல் அடித்துள்ளார். என்னை அடையாளம் காட்டியதாக அவர் கூறுகிறார். அதிமுகவில் என்னை அடையாளம் காட்டியது தினகரன் அல்ல, என்னை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. தினகரன் ஏன் தவறாகவே பேசுகிறார் என தெரியவில்லை. இது ஒரு தலைவருக்கு அழகல்ல எனவே அமமுகவில் இருந்து நானும் எனது ஆதரவாளர்களும் விலகுகிறோம்.

பாஜக மற்றும் திமுகவில் இருந்து அழைப்பு வந்தது. மக்களின் முதல்வராக, தொண்டர்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். என்னுடன் இருந்தவர்கள் விருப்பத்தின் பேரில் அதிமுகவில் இணைகிறேன். வரும் 6ம் தேதி தென்காசியில் நடைபெற உள்ள விழாவில், 20 ஆயிரம் பேருடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*