850 வருட பழமையான பாரிஸ் நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் பாரிஸ் நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது.

பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் இந்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரை இடிந்து விழுந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது.

ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் புனரமைத்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த இந்த தேவாலயத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் கோபுரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது.

கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ விவரங்கள் வெளியாகவில்லை.

இந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ’14ம் நூற்றாண்டு முதல், உலகின் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னமாக திகழும் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் புகைப்படங்கள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு மற்றும் மக்களை போலவே என் எண்ணங்களும் தற்போது உள்ளன’ என பதிவிட்டுள்ளார்.

இதேப்போல் ஐநா பொது சபையின் தலைவர் மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் தீயில் எரிந்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் மனதை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் பொக்கிஷங்களுள் கதீட்ரல் தேவாலயம் ஒன்றாகும். கடந்த 1991ம் ஆண்டு ஐநாவில் கதீட்ரல் தேவாலயம் , உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்பேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து யுனெஸ்கோ தலைவரான ஆட்ரி அசூலே கூறுகையில், ‘ கதீட்ரல் தேவாலயத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து உள்ளுணர்வை ஆழமாக பாதித்துள்ளது. எங்கள் நிறுவனம் இந்த சூழலை தற்போது கண்காணித்து வருகின்றது. பாரிஸ் மக்களுடன் யுனெஸ்கோ எப்போதும் உறுதுணையாக நிற்கும். விலை மதிப்பில்லாத இந்த பாரம்பரியத்தினை மீட்க நாங்கள் என்றும் துணை நிற்போம்’ என கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*