தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 3வது நாளாக மறியல்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.

நேற்று தாலுகா அளவில் மறியல் போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கைதானார்கள். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோ‌ஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு திரண்டு சிறிது நேரம் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினர். பின்னர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 3-வது நாள் வேலை நிறுத்தத்தால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை போல சென்னையிலும் அரசு அலுவலகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இன்று சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட், சங்கர பெருமாள் ஆகியோர் அரசு ஊழியர்கள் மத்தியில் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். தடை உத்தரவை மீறி போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் 500 பெண்கள் உள்பட 1,000 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அதையும் மீறி சாலையில் நின்று மறியல் செய்தனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*