இந்தியாவில் வாக்களிக்கும் எந்திரங்களை ஹேக் செய்ய முடியும்

இந்தியாவில் வாக்களிக்கும் எந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று லண்டனில் இந்திய பத்திரிகையாளர் சங்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில்  சையத் ஷுஜா என்ற நிபுணர் இன்று தகவல் தெரிவித்தார்.

ஐரோப்பாவில் உள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மின்னணுவியல் வாக்களிப்பு எந்திரங்களை எப்படி தவறாகப் பயன்படுத்தலாம், ஹேக் செய்யலாம் என்று மின்னணுவியல் துறை நிபுணர் சையத் ஷுஜா செய்து காட்டினார்.

அந்த நிபுணர் பெயர் சையத் ஷுஜா என இந்தியன் டுடேயின் லண்டன் நிருபரும், தி குயின்ட் பத்திரிகையின் நிருபரும் நேரலை செய்தி வெளியிட்டுள்ளனர். அந்த செய்தியில் உள்ள கூடுதல் விபரங்கள் வருமாறு.

ஷுஜா இந்தியன் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் முன்னாள் ஊழியர். அந்த நிறுவனம்தான் வாக்களிக்கும் இயந்திரங்களை தயாரிக்கிறது.

வாக்களிக்கும் இயந்திரங்களை முதலில் வடிவமைத்ததில் தானும் பங்குகொண்டதாக ஷுஜா கூறினார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்களிக்கும் எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டன.

201 தொகுதிகளில் வாக்களிக்கும் எந்திரங்களை ஹேக் செய்ததால் காங்கிரஸ் தோற்றுபோயிற்று என ஷுஜா தெரிவித்தார்.

டெல்லியில் பாஜக வாக்களிக்கும் எந்திரங்களை ஹேக் செய்யவிடாமல் தடுக்க முடிந்தது. அதனால் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றிபெற்றது.

இந்த விவரம் மகராஷ்டிரா பாஜக தலைவர் கோபிநாத் முன்டேயிக்குத் தெரியும். அதனால் தேர்தல் முடிந்ததும் அவர் கொல்லப்பட்டார் என ஷுஜா கூறினார்.

என்னுடைய உயிருக்கும் மிரட்டல் வந்ததால், நான் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரி பெற்றேன்.

இந்த ஹேக்கிங் பற்றிய முழு விவரத்தையும் கட்டுரையாக வெளியிட கெளரி லங்கேஷ் முன்வந்தார். அதனால் அவரும் கொல்லப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்னர், என்னை அடையாளம் தெரியாதவர்கள் தாக்கினார்கள்.

வாக்களிக்கும் எந்திரங்களை எப்படி ஹேக் செய்வது என்பது பற்றிய சான்றுகளை, ஆவணங்களை விரும்புகிறவர்களுடன் பகிர்ந்துகொள்ள நான் தயார். அவற்றை வெளியிடவும் நான் தயார் என்று ஷுஜா கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கலந்துகொண்டார்.

இந்திய தேர்தல் கமிஷன் மறுப்பு

வாக்களிக்கும் எந்திரங்களை ஹேக் செய்யமுடியாது. பொய்யான தகவல்களை வெளியிடுகிறவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தேர்தல் கமிஷன் தற்பொழுது ஆலோசித்து வருகிறது என்று இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக அமைச்சர் கருத்து

பிரதமர் மோடியை பதவியிலிருந்து நீக்குவதற்கு காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளது. பாகிஸ்தானிடமிருந்துகூட உதவியை காங்கிரஸ் பெறலாம்.

லண்டனில் நடந்த கூட்டத்திற்கு கபில் சிபல் சென்றது தற்செயலான காரியம் அல்ல. காங்கிரஸ், அனுப்பி ராகுல், சோனியா கட்டளையின் பேரில் கபில் சிபல் அங்கு சென்றுள்ளார் என்று பாஜக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

மம்தா பானர்ஜி புகார்

மின்னணுவியல் வாக்களிப்பு எந்திரங்களை தன் விருப்பப்படி ஒருவர் இயக்கி வைக்கலாம் என்று அமெரிக்க டிஜிட்டல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் கூறியதை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு இதற்கு தீர்வு என்ன என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை எழுப்பப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்தக் கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ள மம்தா பானர்ஜி ஒவ்வொரு வாக்கும் மதிப்புடையது. இந்த மதிப்பு மிக்க வாக்குகளைக் காக்க வேண்டியது அவசியம். நம்முடைய மகத்தான ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். கொல்கத்தா பேரணியில் எல்லா எதிர்கட்சிகளும் இது குறித்து கவலை தெரிவித்தனர். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் பிரச்சினை எழுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மம்தா டுவிட்டர் செய்தியில் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*