பயமுறுத்தும் செயலில் நாராயணசாமி – கிரண்பேடி பதிலடி

தன்னை பயமுறுத்தும் செயலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஈடுபட வேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.135 மதிப்பு கொண்ட பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது.ஆனால், வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று கவர்னர் கிரண்பேடி கோப்புகளை திருப்பி அனுப்பினார்.இது தொடர்பாக 2 முறை கோப்புகளை அனுப்பியும் கவர்னர் அதனை திருப்பி அனுப்பினார்.

இதனால் பொங்கல் பரிசு கிடைக்காமல் பொதுமக்கள் கொந்தளித்து உள்ளதால் உடனே பொங்கல் பரிசுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்றும், ஒப்புதல் தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கவர்னர் கிரண்பேடிக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்தார்.இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் எச்சரிக்கைக்கு கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்கவே முதல்-அமைச்சர் நாராயணசாமி விரும்புகிறார். கடந்த 2016-ல் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகைக்கு வந்து என்னை சந்தித்தனர்.அப்போது அதிகாரிகள் நியமனம், அதிகாரிகள் மாற்றம், திட்டம், நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களில் எங்களின் கருத்தை ஏற்பீர்கள் என்று நம்புவதாக தெரிவித்தனர். அதற்கு அனைத்து விவகாரங்களும் தகுதி அடிப்படையில் நடைபெறும் என்று குறிப்பிட்டேன்.

இந்த வி‌ஷயத்தை நான் பதிவு செய்து வைத்தேன். முதல்-அமைச்சர் கவர்னர் மாளிகைக்கு கோப்புகளை அனுப்பினால் அதை படித்து சட்டவிதிப்படி பரிசீலிப்பேன். ஏனெனில் கவர்னர் மாளிகை ரப்பர் ஸ்டாம்பு அல்ல. அதற்கென்று பொறுப்பு உள்ளது. எதிர்பார்ப்பு, தேவைக்கு ஏற்ப பார்வையை வைப்பது தவறு. சட்டவிதிகளின்படிதான் செயல்பட முடியும்.நான் எதற்கும் பயப்படமாட்டேன். இது முதல்- அமைச்சருக்கும் தெரியும். பயமுறுத்தும் வகையில் வார்த்தைகளை முதல்-அமைச்சர் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோளாகவே வைக்கிறேன். பேச்சினை சரியாக கடைபிடிக்க வேண்டும். சில மூத்த அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும் போதும் இதை செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சரின் செயல்பாடு தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளேன். கோப்புகள், கடிதங்களில் குறிப்புகள் மோசமாக உள்ளதையும் குறிப்பிட்டுள்ளேன். புதுவையின் அதிக நலவாழ்வுக்காக ஞானமும், முதிர்வும் கிடைக்க முதல்- அமைச்சருக்கு எனது பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*