தெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்கு

கொடநாடு தொடர்பாக சர்ச்சைக்குரிய ஆவணப்படம் வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் உள்ளிட்ட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றவாளியாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்துபோனார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் பாலக்காடு மாவட்டம் கண்ணடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.

இந்நிலையில் கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கை பதிவு செய்துள்ளனர். ஆவணப்படத்தில் பேட்டியளித்த மனோஜ், சயன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*