சுனாமி நினைவு தினம் – புதுவையில் அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் நினைவாக புதுவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது உறவினர்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள் கதறியழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

டிசம்பர் 26… தமிழகம் மற்றும் புதுவை மக்கள் என்றுமே மறக்க முடியாத சோகம் அரங்கேறிய நாள். சுனாமி என்ற கோரம் இருப்பது நமக்கு அறிமுகமான நாள். அன்றைய தினத்தில் எழும்பிய ராட்சத அலைகள் புதுவை மற்றும் தமிழகத்தின் கரையோரம் இருந்த கிராமங்களில் இருந்த 18 ஆயிரத்து 45 பேரை உயிருடன் தன்னுள் சுருட்டிக் கொண்டது. பலரை இன்று வரை காணவில்லை. தமிழகம், புதுவையில் மட்டும் 8 ஆயிரத்து 18 பேர் பலியாகினர்.

14 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து கதறிய கடலோர மக்களின் அழுகுரலை எளிதாக மறந்து விட முடியாது. சுனாமி எனப்படும் கோர தாண்டவத்தின் 14ம் ஆண்டு நினைவு தினம் புதுவையில் புதன்கிழமையன்று அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி கடற்கரை பகுதியில் கடலில் மலரஞ்சலி செலுத்தி தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தினர். மேலும் சில பகுதிகளில் மெழுகுதிரி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் மற்றும் அரசியல் கட்சியின மீனவ சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.

இதேப்போல் சுனாமி பேரலையால் உயிர்நீத்தவர்களுக்கு உப்பளம் மற்றும் வம்பாகீரபாளையம் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உப்பளம் சோனாம்பாளையம் சந்திப்பில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக மெழுகுதிரி ஏற்றப்பட்ட பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் ஊர்வலமாக சென்று கடலில் மலர் துõவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து வைத்திக்குப்பத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.இதேப்போல் வீராம்பட்டினத்தில் உள்ள சுனாமி தூணில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். சுனாமி பேரழிவை சித்தரிக்கும் வகையில் மணல் சிற்பங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

சுனாமி நினைவு தினம் காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் மீனவர்கள் எவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. சுனாமி சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் மீன் விற்பனை முற்றிலுமாக தடைபட்டிருந்தது. புதுவை பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மாக்கெட்டில் மீன் விற்பனை செய்யப்படும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*