நிஜத்தில் நான் சாது! – ‘ராட்சசன்’ சரவணன்

சில சமயங்களில் கதாநாயகர் களைவிட அறிமுக வில்லன்கள் பெயரெடுத்துவிடுவார்கள். சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ படத்தின் மூலம் அப்படி ஒரு வில்லன் பேசப்பட்டிருக்கிறார். சைக்கோ கொலையாளியாக அந்த படத்தில் மிரட்டிய சரவணன்தான் அந்த வில்லன். ‘நான்’ படப்புகழ் சரவணன். அவரை சந்தித்து பேசியதிலிருந்து…

* உங்களை பற்றி?
அரியலூர்தான் எனக்குச் சொந்த ஊர். வேலை நிமித்தமாக அப்பா திருச்சிக்கு மாறியதால், அங்கே என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மெடிக்கல் ஷாப்பில் ஏழு ஆண்டுகள் வேலை பார்த்தேன். வாழ்க்கையில் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு துரத்தியபோது சினிமாவுக்குச் செல்லும் எண்ணம் வந்தது. எனது தந்தை ஒரு நாடக கலைஞர். அந்த வகையில் நாடகம், சினிமா மீது எனக்கும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தோடு 2004-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.

* முதல் சினிமா வாய்ப்பு?
சென்னையில் நான் வாய்ப்பு தேடிய காலத்தில் ‘பருத்தி வீரன்’, ‘களவாணி’ போன்ற கிராமத்து கதையம்சம் உள்ள படங்களே வந்தன. என் தோற்றத்துக்கேற்ற கதைகளைத் தேடினேன். நிறைய படங்களில் ஒரு சில சீன்களில் வருவதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி பார்த்தால், 2009-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’தான் என் முதல் படம். ‘நான்’, ‘மவுனகுரு’ போன்ற படங்கள் ஓரளவு முகம் தெரிய வைத்தன. அப்படித்தான் ‘நான்’ சரவணன் ஆனேன்.

* ‘ராட்சசன்’ படவாய்ப்பு எப்படி?
‘முண்டாசுப்பட்டி’ படத்தில் என்னுடைய நண்பர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த் போன்றவர்கள் நடித்தார்கள். அந்த படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை. இருந்தாலும் இயக்குநர் ராம்குமாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். ‘ராட்சசன்’ படத்தை அவர் இயக்கும் முயற்சியில் இருந்தபோது அவரை போய் பார்த்தேன். முதலில் போலீஸ் கதாபாத்திரத்துக்குத்தான் கூப்பிட்டார்கள். பிறகு பார்ப்பதற்கு நான் ஆங்கிலோ இந்தியன் போல இருந்ததால் என்னை வில்லன் கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்தார்.

இந்த படத்துக்காக 62 கிலோ எடையிலிருந்து 43 கிலோவுக்கு எடையைக் குறைத்தேன். படத்தில் மேஜிக் காட்சிகளும் பிரதானம் என்பதால், அந்தக் கலையை ஒரு மாதத்துக்கு மேல் கற்றுக்கொண்டேன். ‘தயா’ என்ற மேஜிக் கலைஞர்தான் எனக்கு அந்த கலையைக் கற்றுக்கொடுத்தார். சைக்கோ கதாபாத்திரத்துக்கும், அம்மா கதாபாத்திரத்துக்கும் தினமும் நான்கரை மணி நேரம் மேக்கப் போடுவார்கள். அதற்காக ஷூட்டிங் இருக்கும் நாளில் அதிகாலையிலேயே வந்துவிடுவேன். இயக்குநர் சொன்ன எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டேன்.

* பாராட்டுக்கள்?
என்னுடைய 14 ஆண்டுகள் கஷ்டம் இந்த ஒரு படத்தின் மூலம் தீர்ந்தது. மிகவும் நேசித்த ஒரு துறையில் ஓரிடத்தைப் பிடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினி, அஜீத் ஆகியோர் வாழ்த்தியதை மறக்க முடியாது. யார் அந்த வில்லன், அவரோட உடல்மொழி ரொம்ப ஸ்டைலா இருக்கே என்று ரஜினி சொன்னதைப் பெருமையாக நினைக்கிறேன்.

* நிஜத்தில் நீங்கள் எப்படி?
நிஜத்தில் சரவணன் மிகவும் சாது. இயக்குநர் என்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போதுகூட, அந்த கதாபாத்திரத்துக்கு நேர் எதிரானவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். மிகவும் இளகிய மனம் படைத்த ஆள் நான். நடிப்பு என்று தெரிந்தே படம் பார்க்கும்போதும் சென்ட்டிமென்ட் காட்சியில் என்னை அறியாமல் அழுதுவிடுவேன்.

* படவாய்ப்புகள்?
இரண்டு படவாய்ப்புகள் வந்துள்ளன. இனி வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் ராம்குமார் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததுபோல எந்த இயக்குநர் வாய்ப்பு கொடுத்தாலும், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*