வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43

வெளிநாடுகளுக்குச் சொந்தமான 30 செயற்கைக்கோள்கள் மற்றும் இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோளைச் சுமந்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், கவுன்ட்டவுன் முடிந்தவுன், இஸ்ரோ உருவாக்கிய ஹைசிஸ் (Hyper Spectral Imaging Satellite) செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை சரியாக 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இது இந்த ஆண்டு இஸ்ரோ செலுத்திய 6ஆவது செயற்கைக் கோள் ஆகும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.

இந்த செயற்கைக்கோளுடன் அமெரிக்காவின் 23 செயற்கைக்கோள்கள், ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 7 நாடுகளின் செயற்கைக்கோள்கள் என 30 செயற்கைக் கோள்களையும் சி43 ராக்கெட் சுமந்து சென்றது.

380 கிலோ எடை கொண்ட ஹைசிஸ் செயற்கைக்கோளானது விவசாயம், வனவளம், புவிப்பரப்பு, கடலோரப் பகுதிகள், உள்நாட்டு நீராதாரங்கள் ஆகியவற்றின் தன்மை குறித்த தகவல்களை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து பூமிக்கு அனுப்பும். இதற்காக அந்தச் செயற்கைக்கோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது இஸ்ரோவின் ராக்கெட் இது ஆகும். விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட 45 ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*