என்னை நீக்க அதிகாரம் இல்லை – காயத்ரி ரகுராம்

பா.ஜ.க.வில் இருந்து தன்னை நீக்குவதற்கு மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜனுக்கு அதிகாரம் இல்லை என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் நடன இயக்குனராகவும் விளங்குபவர் காயத்ரி ரகுராம்.இவர் நள்ளிரவு குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் அபராதம் செலுத்தியதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை மறுத்த காயத்ரி ரகுராம் தன்மீது இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜனதாவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம் என்று குற்றம் சாட்டினார். காயத்ரி ரகுராம் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பதால் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இந்த குற்றச்சாட்டு பற்றி கேட்டார்கள். அதற்கு தமிழிசை ‘காயத்ரி ரகுராம் பா.ஜனதாவிலேயே இல்லை’ என்று பதில் அளித்தார். இந்த கருத்துக்கு காயத்ரி ரகுராம் கோபமாக பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் ‘அன்புள்ள தமிழிசை மேடம், நான் பாஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி. இரண்டாவதாக தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா என்ன?

நான் பா.ஜனதாவில் இருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை.நீங்கள் தமிழக பாஜனதாவின் தலைவர் மட்டும்தான். நீங்களே எல்லா எதிர்காலத்தையும் நிர்ணயித்துவிட முடியாது. தமிழக பாஜகவில் இருந்து கொண்டு பிரச்சனைகளை சந்திப்பதைவிட அதில் இருந்து நான் விலகியே இருக்கிறேன். அன்று காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சையில் நான் உண்மையை விளக்கத் தயாராக இருக்கிறேன்.

ஆனால், யாரும் கேட்கத் தயாராக இல்லை. அன்று நான் தான் காரை ஓட்டிச் சென்றேன். காவலர் ஒருவர் என்னை இறக்கிவிட்டார் என்று சொல்வது பொய். நான் தேவைப்பட்டால் ரத்த பரிசோதனைக்குக்கூட தயார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*