வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட ஜிசாட் -29 செயற்கை கோள்

தொலைதொடர்பு செயற்கைகோளான ஜிசாட் -29 (GSAT-29) உடன் ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 டி2 (GSLV-MkIII-D2) ராக்கெட்  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 4 டன் எடையுள்ள செயற்கைக் கோளை கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜினைப் பயன்படுத்தி முதன்முதலாக வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி இந்தியா புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்தியாவில் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 3,425 கிலோ எடை கொண்ட ஜிசாட் 29 செயற்கைகோள் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

முக்கியமாக இந்த செயற்கைகோள் மூலமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தொலைதொடர்பு தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த ஜிசாட் -29 செயற்கைகோள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக அதிக எடை கொண்ட செயற்கோள் ஆகும்.  இதன் கூடுதல் எடை காரணமாக இதற்கு பாகுபலி செயற்கோள் என நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் செல்லப்பெயர் சூட்டியுள்ளனர்.

ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை மதியம் 2.50 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 ராக்கெட்டுக்கான கவுண்டவுன் துவங்கியது. மாலை 5.08 மணிக்கு ஜிசாட் -29 செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 டி2 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது இஸ்ரோவால் ஏவப்படும் 33வது ராக்கெட் அகும்.

விண்ணில் பாயந்த ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 டி2 ராக்கெட் முதலில் திட எரிபொருள் மூலமாகவும் பின் நீள்வட்ட பாதையில் சென்ற போது கிரையோஜெனிக் எரிபொருள் மூலமாகவும் இயக்கப்பட்டது.

இறுதியாக பூமியில் இருந்து மிக குறைந்த தூரமான 190 கிலோமீட்டர்  மிக அதிக தூரமாக 36,000 கிலோமீட்டர் வரை செல்கிற நீள்வட்ட பாதையில் ஜிசாட் -29 செயற்கை கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

திட்டமிட்டப்படி செயற்கைகோள் சரியான பாதையில் பயணிப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இஸ்ரோ தலைவர் மகிழ்ச்சி

ஜிசாட் -29 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோவின் தலைரான கே.சிவன் தெரிவித்தார்.

ஜிசாட் 29 செயற்கைகோள் நீள்வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவன் ‘‘ஜிசாட் -29 செயற்கைகோளை உருவாக்கிய குழுவினர் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 டி2 ராக்கெட் குழுவினருடன் சிறப்பாக ஒத்துழைத்தனர். அதற்காக நன்றி கூறுகிறேன்’’ என தெரிவித்தார்.

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் தனது பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. திட்டமிட்டப்படி நீள்வட்டப்பாதையில் ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கை கோளை விடுவித்துள்ளது.

இனி செயற்கைகோளில் இணைந்துள்ள சிறு பூஸ்டர் ராக்கெட்டுகளை இயக்கி உரிய சுற்றுவட்டப்பாதையில் நிபுணர்கள் நிறுத்துவார்கள்.

இன்று முதல் ஜிசாட் -29 தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு சமிஞ்சைகளை அனுப்ப தொடங்கும். ராக்கெட்டுகளை  உருவாக்க உதவிய இந்திய தொழில் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என சிவன் கூறினார்.

இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் ஒன்றான சந்திராயன் 2 செயற்கைகோளை இதே ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*