விண்ணில் நாளை ஏவப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3

வங்கக் கடலோரத்தை ‘கஜா’ புயல் அச்சுறுத்தி வரும் நிலையில், திட்டமிட்டபடி ஜிஎஸ்எல்வி மார்க் 3  புதன் கிழமை மாலை 5 மணிக்கு ராக்கெட்  விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நம்நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. எனினும், அதிக எடை கொண்ட செய்ற்கைக்கோள்களை விண்ணில் ஏவ மற்ற நாடுகளின் உதவியைத்தான் இஸ்ரோ நாட வேண்டியுள்ளது. அதை மாற்றி அமைக்கும் விதமாக நமது விஞ்ஞானிகளின் நீண்ட கால உழைப்பில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் தயாரிக்கப்பட்டது.

இந்த ராக்கெட் 6,400 கிலோ எடை கொண்டது. இதன்மூலம் அதிகபட்சம் 4,000 கிலோ எடை உடைய செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும். பலகட்ட சோதனைக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தொடர்ந்து திறன் மேம்பாட்டு பணிகள் முடிந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இப்போது முழு வீச்சில் தயாராகியுள்ளது.

அடுத்தகட்டமாக அதிநவீன ஜிசாட் 29 தொலைத்தொடர்பு செயற்கைகோள் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து மார்க் 3 ராக்கெட் மூலம் நாளை 14ம் தேதி மாலை விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஜிசாட் 29 செயற்கைக்கோள் 3,423 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக மலை, மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் முக்கிய பணியாகும். அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகள் மிகவும் பயன் பெறும். இதில் அதிக திறன் கொண்ட கா, க்யூ பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், துல்லியமாக படம் எடுக்கும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பரிசோதனை முயற்சியில் க்யூ/வி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே வங்கக்கடலில் தீவிரமாகியுள்ள ‘கஜா’ புயல் காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், திட்டமிட்டப்படி நாளை ராக்கெட் விண்ணில் பறக்கும்.இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் இன்று துவங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ தயாரித்ததில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தான் அதிக எடை கொண்ட ராக்கெட். இதனால் அதற்கு ‘பாகுபலி ராக்கெட்’ என புனைப் பெயர் வந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*